
லிற்றில் எய்ட் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு குறுகிய ஈராண்டு காலத்தில் தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சிறிய பல உதவித் திட்டங்களை வெற்றிகரமாகவே மேற்கொண்டு வருகின்றது. Global Medical Aid, Medicine Without Borders (Denmark). Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் நவமங்கை நிவாசம் ஆகிய தமிழ் அமைப்புகளுடனும் லிற்றில் எய்ட் பொது வேலைத்திட்டங்களில் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உடனடி உதவித்திட்டங்களான உணவு பால்மா மற்றும் மருத்துவ உதவிகளில் ஈடுபட்டு வந்த லிற்றில் எய்ட் அண்மைக் காலமாக நீண்ட கால உதவித் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக மாணவர்களின் கல்வி கணணித் தொழில்நுட்பப் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.

கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் இலவச கணணிப் பயிற்சி வகுப்புகள்:
பொருளாதார வாழ்வாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இளம் சந்ததியினருக்கு கணணி அறிவை மேம்படுத்துவதுடன் அதற்குரிய நேரடிப் பயிற்சியினையும் அளிக்கும் வகுப்புக்கள் 12-06-2011 ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிவரும் பத்திரிகைகள் ஊடாக விளம்பரம் செய்யப்பட்டு 30 மாணவிகள் Little Aid இன் முதலாவது பயிற்ச்சித் திட்டதில் இணைக்கப்பட்டு உள்ளனர்
காலம் சென்ற தனது பெற்றேரின் ஞாபகார்த்தமாக கோப்பாய் ராஜவீதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள நவமங்கை நிவாசம், பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம் சந்ததியினருக்கு உதவுவதையிட்டு தான் மிக்க மகிழ்ச்சியடைவதாக லண்டனில் வசித்துவரும் நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் செல்வி சுவர்ணலீலா நவரத்தினம் தெரிவித்தார்.
.
Little Aid ஸ்தாபனத்தின் நிர்வாகத்தில் இக்கணணிப் பயிற்சி பட்டறையை இரு தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களினதும் ஒரு உதவியாளரினது துணையுடனும் கணணி ஆசிரியர் பார்த்தீபன் வரதராஜன் நடத்தி வருகின்றார். மாறிவரும் தற்போதைய சூழலை மாணவர்கள் எதிர்கொள்ள இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் அவசியமானவை. கடந்தகால அசாதாரண சூழ்நிலையால் இந்த வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது இந்த வாய்ப்பு நவமங்கை நிவாசத்தில் வழங்கப்பட்டு இருப்பது மிகச் சிறந்த வரப்பிரசாதம் என்றார் பார்த்தீபன் வரதராஜன்.

Windows, Internet, MS Office (MS Word, MS Exel, MS Powerpoint, MS Access) ஆகிய தலைப்புக்களின் கீழ் 3 மாதம் பயிற்சி நடாத்தப்படும். தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான வகுப்புக்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு. கிழமைகளில் நடைபெறும். மூன்று மாத முடிவில் Vocational Training Center ஊடாக பரீட்சை நடத்தப்பட்டு பரீட்சையில் சித்தி அடைபவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Little Aid ஸ்தாபனமும் நவமங்கை நிவாம்சதின் ஸ்தாபனரும் பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்தி உள்ளனர்.
பயிற்சிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்களின் படம் ஒட்டப்பட்ட அட்டை வழங்கல்.
அதில் அவர்கள் கணணிப் பயிற்சியில் கலந்துகொள்ளும் போது ஒவ்வொரு நாளும் அவர்கள் கணணிப் பயிற்சியில் பங்குபற்றியதை ஆசிரியர்களால் உறுதிப்படுத்தல்.
80 வீதத்திற்கு குறைவான வரவு உள்ள மாணவர்கள் இறுதிப்பரீட்சையில் பங்கு பற்றவோ அல்லது சான்றிதழ் பெறவோ தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.

பயிற்சி நெறியில் பங்குபற்றுபவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட பாடக்குறிப்புக்கள் வழங்கல். இதன் மூலம் அவர்களின் கற்றலை இலகுபடுத்தல். ஒவ்வொரு பாடப்படிப்பும் முடிவுற்ற உடன் அதற்குரிய எழுத்து செயன்முறை பரீட்சைகள் நடத்தல்.
ஒவ்வொரு மாணவன் மீதும் தனி கவனம் செலுத்தல்.

வகுப்பறையில் 7 கணணிகள் உள்ளதால் தெரிவு செய்யப்பட்ட 30 பேரையும் சிறு குழுக்களாக பிரித்து கல்வி வழங்கல்.
ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது.
இப்பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கான செலவை Little Aid வியாபார நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள Charity Box இல் சேர்க்கப்படும் பணத்தில் இருந்து செலுத்த திட்டமிட்டு உள்ளது.
Little Aid ஸ்தாபனமும் இவ்வாறன கணணி பயிற்சி நிலையங்களை நாட்டின் பல பாகங்களிலும் நடாத்த திட்டமிட்டுள்ளது. Little Aid உடன் நட்புடன் இணைந்து பணியாற்றுகின்ற ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், அகிலன் பவுண்டேசன் ஆகியவை பல கணணிப் பயிற்சி வகுப்புகளை வடக்கிலும் கிழக்கிலும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கணணித் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்காக இவ்வாறான கணணிப் பயிற்சி நிலையங்களை மேற்குறிப்பிட்ட பொது அமைப்புகள் பரவலாக ஆரம்பித்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குருநகர் புனித றோக்ஸ் வித்தியாலயத்தில் கணணி நிலையம் திறப்பு:
Little Aid ஸ்தாபனத்தினால் குருநகர் புனித றோக்ஸ் கல்லூரியில் கணணிப் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையம் ஏப்ரல் 4இல் யாழ்ப்பாண பெரிய கோவிலின் பங்குத்தந்தை வணபிதா சகாயம் அவர்களும் Little Aid ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் உம் கூட்டாக திறந்து வைத்தனர்.
குருநகர் புனித றோக்ஸ் வித்தியாலயம் யாழ் மாவட்டத்தின் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்று. அக்கல்லூரியில் கற்கின்றவர்கள் பெரும்பாலும் வறிய குடும்பங்களைச் சேர்தவர்கள். இங்கு கல்வி கற்கும் பிள்ளைகள் தமது பரீட்சைக்கு செலுத்த வேண்டிய வருடாந்த கட்டணமான 20 ரூபாயைக் கூடக் கட்ட முடியாமல் உள்ளதாக மரியதாசன் தெரிவித்தார். இக்கல்லுரிக்கு மூன்று கணணிகளும் அதற்கான தளபாடங்கள் மற்றும் internet இணைப்பிற்கான வசதியையும் Little Aid ஸ்தாபனம் வழங்கியிருந்தது. தனிப்பட்ட சிலரின் உதவிகளின் துணையுடன் இவ்வாறான சிறிய உதவித் திட்டங்களை தனது பெயருக்கேற்ப Little Aid ஸ்தாபனம் மேற்கொண்டு வருகின்றது.
Book Abroad புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகம்:

ஸ்கொட்லாந்தில் இயங்கும் Book Abroad என்ற அமைப்புக்கு Little Aid விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு Book Abroad சிறுவர்களுக்கான 3000 புத்தகங்களை Little Aidக்கு அனுப்பி வைத்திருந்தது. இப்புத்தகங்களை லண்டனில் பொறுப்பேற்ற Little Aid அவற்றை ஸ்ரீலங்காவின் பின்தங்கிய 5 பாடசாலைகளுக்கு விநியோகம் செய்துள்ளது. ஆரம்ப கல்விகற்கும் சிறார்களுக்கு அதிலும் குறிப்பாக பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு மிகவும் பிரயோசனப்படக் கூடியவை.
இம்மூவாயிரம் புத்தகங்களும் லண்டனிலிருந்து கொழும்பிற்கு கப்பல் மூலமாக அனுப்பப்பட்டது. அவற்றை Little Aid வேலைத்திட்ட இணைப்பாளர் ரி கொன்ஸ்டன்ரைனும், ஸ்ரீலங்காவில் உள்ள Little Aid உதவியாளர் Malan Fernando, ஆனந்தகுமார் ஆகியோரால் பின்வரும் 5 பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.
1) ஒஸ்மேனியா முஸ்லீம் மகாவித்தியாலயம் – (யாழ்ப்பாணம்)
2) சில்லாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் – (யாழ்ப்பாணம்)
3) கொன்சாலிஸ் மகா வித்தியாலயம் – (ஜாஎல)
4) குருநகர் புனித றோச் மகா வித்தியாலயம் – (யாழ்ப்பாணம்)
5) ஊர்காவற்துரை புனித அந்தோனியார் கல்லுரி – (யாழ்ப்பாணம்)
Little Aid திட்ட இணைப்பாளரிடம் இருந்து ஒஸ்மேனியா முஸ்லீம் வித்தியாலயத்தின் அதிபர் M.S.A.M. முபாரக். சில்லாலை றோமன் கத்தோலிக்க கல்லூரியின் உப அதிபர் எஸ். பாலச்சந்திரன் அவர்களும் கொன்சாவின் மகாவித்தியாலயத்தின் சார்பில் அதிபர் பிதா. ஆனந்தவித்தானகே அவர்களும் குருநகர் றோச் கல்லுரியின் சார்பில் அதன் அதிபரும் ஊர்காவற்துரை புனித அந்தோனியார் கல்லுரியின் சார்பில் அதன் அதிபர் வண பிதா ரொபின்சன் ஜோசப் அவர்களும் புத்தக பொதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
நன்கொடையாக கொடுக்கப்பட்ட புத்தகங்களை பின்தங்கிய பாடசாலைகளுக்கு வெற்றிகரமாக கையளிக்கப்பட்டதை உறிதிப்படுத்ததினால் அந்த அமைப்பு மேலும் புத்தக நன்கொடைகளை Little Aid அமைப்பிற்கு அளிக்குமென Book Abroad உறுதிமொழி அழித்துள்ளது. இதன் பிரகாரம் Little Aid அமைப்பு மேலும் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு விநியோகம் செய்ய இருக்கின்றது

Book Abroad அமைப்பு ஊடாக இலவச ஆங்கில நூல்களைப் பெற்று விநியோகிக்கின்ற சேவையை என் செல்வராஜாவின் அயோத்தி நூலக சேவையுடன் இணைந்து தேசம், சிந்தனை வட்டம் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டன. யாழ்ப்பாண நூலகம், மற்றும் இலங்கையின் பல்வேறு பாடசாலைகளுக்கும் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லீம் சிறார்களுக்கும் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:
