லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

Leave a Reply

X