அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார். கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.
வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.
லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.
உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.
யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.
லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.
தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.
லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.
இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.
லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.
ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.