திணை விதைத்தவன் திணை அறுப்பான் – லிற்றில் எய்ட் இன் லிற்றில் சக்சஸ் – Little Aid’s Little Success!
லண்டன் வாழ் சமூகசேவையாளர் லிற்றில் எய்ட் க்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடை

ஒரு பொது ஸ்தாபனம் ஒன்றை நிறுவி அதனை பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புற நடத்துவது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. அதனை பல நல்ல உள்ளங்களின் உதவியின்றி சாதித்திருக்க வாய்ப்பேயில்லை. இன்றும் பலர் எமது செயற்பாடுகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னதாக வைரமுத்து வைத்திலிங்கம் என்ற சமூக சேவையாளர் மறைந்த தனது சகோதரனின் நினைவாக ரூபாய் 20 லட்சத்தை லிற்றில் எய்ட்க்கு அன்பளிப்புச் செய்துள்ளார். லிற்றில் எய்ட் மையத்தில் தொடர்ந்தும் ஆங்கில மொழிக் கல்வியை மேற்கொள்ள அந்த ரூபாய் 20 லட்சத்தை நிரந்தர வைப்பிலிட்டு அதன் வருமானத்தில் இருந்து ஆங்கில வகுப்புகளை நடாத்துவதற்கு வைத்திலிங்கம் வைரமுத்து இந்த நிதி உதவியைச் செய்துள்ளார். தனக்கு எவ்வித விளம்பரமும் வேண்டாம் என்பதால் அவர் தனது புகைப்படத்தைக் கூட பகிரவில்லை. இவ்வாறான உதவியாளர்களின் செயற்பாட்டோடு லிற்றில் எய்ட் தற்போது தனது 12வது அகவையில் பயணத்தைத் தொடர்கின்றது.

கடந்த செப்ரம்பர் மாதம் லிற்றில் எய்ட்க்கு ஆனுப்பி வைக்கப்பட்ட தரமான ஆடை அணிகள் மற்றும் பொருட்கள் கொண்ட மூன்று பெட்டிகள் இவ்வாரம் கிளிநொச்சியைச் சென்றடைந்தது. தீபா கனகரட்னம் மற்றும் சிலர் அன்பளிப்புச் செய்த ஆடை அணிகலன்களே தற்போது கிளிநொச்சியை வந்தடைந்தது. அவர் ஏற்கனவே அனுப்பி வைத்த மூன்று பெட்டி ஆடைகள் முல்லைத்தீவு கற்சிலைமடு பிரதேசத்தில் வறுமைக்கோட்டில் வாழும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் மற்றையோருக்கும் வழங்கப்பட்டது. தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆடைகள் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் உள்ளவர்களுக்கு விநியோக்கிகத் திட்டமிட்டுள்ளதாக லிற்றில் எய்ட் இன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்துள்ளார்.

லிற்றில் எய்ட் கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டது முதல் கிளி விவேகானந்தக் கல்லூரியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தற்போது லிற்றில் எய்ட் இன் ஆங்கிலக் மொழிக் கற்கை வகுப்புகள் விவேகானந்தக் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. கல்லூரி அதிபர் பாடசாலை முன்னேற்றத்திலும் மாணவர்களின் முன்னேற்றத்திலும் மிக அக்கறையோடு பணியாற்றி வருகின்றார். லிற்றில் எய்ட்டில் கணணி மற்றும் தையல் வகுப்புகளில் கற்கின்ற மாணவர்களில் 50 வீதமானவர்கள் விவேகானந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எண்பதுக்களின் நடுப்பகுதியில் மலையகத்தில் இருந்து வந்து குடியேறியவர்களே அம்பாள்குளத்தில் வாழ்கின்றனர். இப்பகுதியில் பாடசாலை அமைந்தால் தங்களுக்கு வேலைக்கு ஆட்கள் வரமாட்டார்கள் என்ற எதிர்ப்பு இருந்த சூழலிலும் அங்கு ஆரம்ப பாடசாலையை அமைத்து அதனை பின் 11ம் ஆண்டுவரை பெருப்பித்து முன்னேற்றுவதில் முன்னாள் பா உ சந்திரகுமார் முன்நின்று உழைத்திருந்தார். அதிபரின் அயராது முயற்சியால் இப்பாடசாலையில் வெகுவிரைவில் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்க அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்பாடசாலை மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகளை மேற்கொண்டு பாடசாலையின் பெறுபேற்றுத் தரத்தை உயர்த்த லிற்றில் எய்ட் உதவியளிக்கும் என்ற உதவியை லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன், விவேகானந்த கல்லூரி அதிபருக்கு வழங்கியுள்ளார். இத்திட்டத்தை அமுல்படுத்த யாழ் பல்கலைக்கழகம் சார்ந்த ‘மனிதம்’ அமைப்பு பட்டதாரி மாணவர்கள் முன்வந்துள்ளனர். பாடசாலை மீள இயங்க ஆரம்பித்ததும் மாலை நேர வகுப்புகள் லிற்றில் எய்ட் மேற்பார்வையில் ஆரம்பமாகும்.

லிற்றில் எய்ட் ஒரு தனியார் கல்வி நிறுவனமாக அல்லாமல் அச்சமூகத்தின் மையமாக்கி செயற்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே செயற்பட்டு வருகின்றது. அதனையே லிற்றில் எய்ட் இன் பணிகளில் ஆலோசகராகவும் ஆதரவாளராகவும் செயற்பட்டு வரும் நூலகவியலாளர் என் செல்வராஜா வலியுறுத்தி வருகின்றார். தற்போது லிற்றில் எய்ட் மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் அமைக்கின்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றது.

கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் மூளைத்திறன் சிந்தனைத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் செஸ் விளையாட்டுப் பயிற்சிகளை லண்டனில் இருந்து சேனன் மேற்கொண்டு வருகின்றார். வடமாகானத்தின் அடுத்த செஸ் சம்பியனை லிற்றில் எய்ட் உருவாக்கும் என்று அவர் முழுமனதோடு இணையவழியில் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.

மேலும் எமது சகோதர அமைப்பாக லிற்றில் எய்ட் இன் கீழ் இயங்கி வருகின்ற கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பு கடந்த ஆண்டு 30 ஏக்கரில் களனியை துப்பரவாக்கி நெற்செய்கையில் ஈடுபட்டது. ரூபாய் 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விவசாயப் பணிக்கு லிற்றில் எய்ட் கடன் அடிப்படையில் வழங்கிய நிதியின் ஒரு பகுதியை அவர்கள் கடந்த போகத்தில் மீளச் செலுத்தி இருந்தனர். தற்போது இரண்டாவது போகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் Little Sci_Kit விஞ்ஞான விளையாட்டு பொருட்களை வடிவமைக்கும் ரூபாய் பத்துலட்சம் செலவிலான திட்டம் ஒன்றை யாழ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் ஊடாக லிற்றில் எய்ட்
மேற்கொண்டு வருகின்றது. பத்துவரையான விஞ்ஞான ஆய்வுகூட செயற்பாடுகளை மையப்படுத்திய விளையாட்டுப் பொருட்களுக்கான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி உதவியை மூவர் வழங்கி உள்ளனர்.

லிற்றில் எய்ட்டை புதிய ரஸ்டிகளும் புதிய நிர்வாகமும் பொறுப்பேற்றது முதல் கொரொனா காலத்திலும் அதன் செயற்பாடுகள் வினைத்திறனுடன் இடம்பெற்று வருகின்றது. லிற்றில் எய்ட்யை இல்லாமல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்து அதனை மீளப் புனர்நிர்மானம் செய்து மிளிரச் செய்த வ சிவஜோதி தற்போது எம்மோடு இல்லாதது மிகப்பெரும் துயரம். ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் லிற்றில் எய்ட் இல் பணிபுரிந்த காலத்தையே வ சிவஜோதி தன்னுடைய மிக இனிமையான காலம் என்று பதிவுசெய்துள்ளமை லிற்றில் எய்ட் சார்ந்த அனைவருக்குமே ஒரு ஆறுதலான விடயம். இப்போது அவர் விட்டுச்சென்ற பணியை அவருடைய துணைவியார் தொடர்கின்றார். மிகத் திறமையாகவும் ஆளுமையுடனும் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றார். லிற்றில் எய்ட் வளர்ச்சியில் கொரொனா சற்று தடங்கலை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் பயணம் சற்று மெதுவாகத் தொடர்கின்றது. மேலும் வரும் நவம்பர் 18இல் வ.சிவஜோதியின் பிறந்ததினத்தையொட்டிய நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் பயணத்தில் முதல் கைகொடுத்தவர் சுவர்ணலீலா நவரட்ணம், அவருடைய இடத்திலேயே லிற்றில் எய்ட் ஆரம்பமானது, பிஎம் புன்னியாமீன் லிற்றில் எய்ட் இன் கல்வித் திட்டங்களை வன்னி முகாம்களிலேயே மேற்கொண்டவர். லிற்றில் எய்ட் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்புச் செய்தவர் எம் கோபாலகிருஸ்ணன். இவர் 2010 முதல் 2015 வரையான ஐந்து ஆண்டு காலங்களில் ஒரு கோடி ரூபாவரை உதவி வழங்கியுள்ளார். இவருடைய உதிவியுடனேயே செஞ்சோலை சிறார்களை பராமரிக்க முடிந்தது. ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அன்றும் இன்றும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. சிறிதரன் திங்ருவைஸ் சார்பில் லிற்றில் எய்ட்க்கு இரண்டு ஆண்டுகள் உதவிகளை மேற்கொண்டு வந்தார். இவர்கள் அனைவரதும் பங்களிப்பு இல்லாமல் லிற்றில் எய்ட் இவ்வளவு காலத்திற்கு தனது சேவைகளை மேற்கொண்டு இருக்க முடியாது. தற்போதைய ரஸ்டிகள் ஒவ்வொருவருமே லிற்றில் எய்ட் இன் லட்சியத்தோடும் அதன் நோக்கத்தோடும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போதைய தலைவர் கணக்கியலாளர் கதிர் நந்தகுமார் செயலாளர், இணைய வலைப் பொறியியலாளர் சுகேந்திரன் ராஜசிங்கம் ஆகியோர் லிற்றில் எய்ட்டை மிகத்திறம்பட கொண்டு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

X