கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு ஒன்றும் மலிவு விற்பனை சந்தை ஒன்றும் கடந்த 06.08.2023 அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 05 மணி வரை நடைபெற்றது. லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் திரு.த.ஜெயபாலன் அவர்களின் தலைமையின் கீழ் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த நிகழ்வின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்கள் சந்தை விற்பனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்ததுடன் கிளிநொச்சியின் சுய தொழில் முயற்சியாளர்களின் பதிவுகளை ஆவணப்படுத்தும் லிட்டில் பேர்ட் எனும் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த நூலானது திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் முழுமையான முயற்சியில் உருவாக்கப்பட்டிருந்த அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரபல உள்ளூர் உற்பத்தியாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டு அவர்கள் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நூல் வெளியீட்டு விழாவின் போது தலைமை உரையை வழங்கிய திரு.த.ஜெயபாலன் அவர்கள் உள்ளூர் உற்பத்திகளின் தற்போதைய நிலை தொடர்பிலும் – அவற்றை மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தி இருந்தார். அந்த அடிப்படையில் லிட்டில் பேர்ட் நூலானது கிளிநொச்சி மாவட்ட சுய தொழில் உற்பத்தியாளர்களை ஆவணப்படுத்தும் முக்கியமான ஒரு நூல் எனக் குறிப்பிட்ட அவர் அங்கு மேலும் பேசிய போது “பொருளாதார நெருக்கடி அதற்கு முன்னரான கால கொவிட் தொற்று காலம் ஆகிய இடர்பாடான காலங்களில் கூட இந்த சுய தொழில் முயற்சிகளே இலங்கையின் பொருளாதார நகர்வுகளை ஓரளவுக்கேனும் தூக்கி நிறுத்தின. இன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளாக நாம் பார்க்கக்கூடிய அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் சுய தொழில் முயற்சியாளர்கள் ஆதரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அதனால் அங்கு திறமையான – புகழ்பெற்ற தொழில் வெற்றியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் அரச நிறுவனங்களோ – அரசு அதிகாரிகளும் கூட இது தொடர்பில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இதனாலேயே பலர் சுய தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதை விடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்ற எண்ணம் ஒன்றுக்குள் சென்றுள்ளார்கள். என்று இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாறர்களை ஊக்குவிக்கின்ற ஒரு நிலை உருவாகின்றதோ.. அன்று இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி பாதை நோக்கி நகரும்.” என திரு த. ஜெயபாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த மாடசாமி சுவேந்திரன் (S.J. ஒருங்கிணைந்த பண்ணை) அவர்கள் தன்னுடைய அனுபவ பகிர்வை பகிர்ந்திருந்தார். “யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கை நெறியை படித்திருந்த போதிலும் கூட அரசு தொழில் ஒன்றை எதிர்பார்த்து நான் அதனை கற்கவில்லை. பல்கலைக்கழகத்தில் நான் கற்றுக் கொண்டவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த சுய தொழில் முயற்சியை படிப்படியாக ஆரம்பித்து இன்று 40 நாடுகளுக்கு என்னுடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளேன். எனவே முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் தொழில் முயற்சிகளில் கால் வைக்கக்கூடிய துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். ” என்றவாறு தன்னுடைய அனுபவப் பகிர்வை அவர் வழங்கியிருந்தார்.

மேலும். லிட்டில் பேர்ட் நூலுக்கான நயவுரை வண.பிதா ஜோசுவா அவர்களால் வழங்கப்பட்டிருந்தது. “சிறிய மாணவர்களாக இருந்தாலும் கூட சிட்டுக்குருவிகள் போல அவர்கள் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார்கள். இலக்கிய முயற்சிகள் – இலக்கிய வரைமுறைகள் இந்த நூலில் உள்ளனவா..? இல்லையா..? என்ற வாத விவாதங்களுக்கு அப்பால் இந்த நூல் நம் அனைவரிடமும் காணப்பட வேண்டிய ஒரு நூல். நமது கிளிநொச்சி மக்கள் தங்களை எவ்வாறு வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நூல் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. என்றவாறு அவர் தன்னுடைய நயவுரையை வழங்கினார். மேலும் குறித்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டிருந்த சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளரும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் உரையாற்றிய போது “அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அண்மைய நாட்களில் தமிழர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையிலும் கூட இந்த மண்ணிலேயே இருந்து தங்களுடைய சுயதொழில் உற்பத்திகளை மேற்கொண்டு இந்த நிலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்க கூடிய மக்களே உண்மையில் இந்த மண்ணின் மக்கள். சுயதொழில் உற்பத்தியாளர்கள் தங்களை விளம்பரப்படுத்துவதற்கான மேலதிகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். உள்ளூர் உற்பத்திகளை மக்கள் அதிகம் முன் வந்து நுகர்கின்ற போது தான் உள்ளூர் உற்பத்தியாளர்களும் நம்பிக்கையுடன் தங்களுடைய உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு உற்பத்திகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை எங்களுடைய உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.” என்றவாறு தனது கருத்தை அவர் வலியுறுத்தி இருந்தார். லிட்டில் பேர்ட் நூல் வெளியீட்டின் முதல் பிரதிகளை முறிகண்டி ஹாட்வெயார், கிளிநொச்சி மார்ஸ்கொம்பியூட்டர் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் குறித்த நூலில் உள்வாங்கப்பட்டிருந்த உள்ளூர் கைத்தொழில் உற்பத்தியாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு நூல் அன்பளிப்பு செய்து கௌரவிக்கப்பட்டனர்.

நூல் வெளியீட்டினை தொடர்ந்து மாணவர்களின் உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சி நிகழ்வுகள் ஆரம்பித்தது. கண்காட்சி மாத்திரமன்றி மாணவர்களின் உற்பத்தி பொருட்களும் மலிவு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி கிளிநொச்சியின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு அவை மலிவு விலைக்கு மக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

X