லிட்டில் டெக் அக்கடமியில் தொழில் கல்வியை கற்க வரும் மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்குடனும் – அவர்களுக்கான ஓய்வு நேரத்தை வளாகத்தில் ஏற்படுத்தி மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி அவர்களை மனதளவில் உற்சாகமாக உணர வைக்கும் நோக்குடனும் மாதந்தோறும் மாணவர் கலை மன்றம் நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் மேற்பார்வையில் – அவர்களின் நெறிப்படுத்தலிலேயே அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைத்து மேடையேற்றப்படும் இந்த மாதத்துக்கான மாணவர்கள் கலை மன்றம் 07.09.2024 அன்று லிட்டில் டெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரிய ஆலோசகர் திரு.கணபதிப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தலைமை உரையை ஆற்றிய திரு.கணபதிப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “புலம்பெயர் தேசங்களிலுள்ள நம்மவர்களின் நல்லெண்ணங்களின் வெளிப்பாடாகவே இந்த லிட்டில் டெக் அக்கடமி எனும் தொழில் கல்வி நிறுவனத்தை நான் பார்க்கிறேன். 15 வருடங்களை தாண்டி பயணிக்கும் இந்த தொழில் கல்வி நிறுவனத்தின் வெற்றியின் பின்னால் முறையான திட்டமிடலும் – சமூக மாற்றம் என்ற அடிப்படை சிந்தனையும் இருப்பதும் வரவேற்கத்தக்கது. இலவசமான இந்த தொழில் கல்வி நிறுவனத்தை கிளிநொச்சி மக்களும் மாணவர்களும் முறையாக பயன்படுத்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.
நிகழ்வுகளின் தொடர்ச்சியாக லிட்டில் டெக் அக்கடமி மாணவர்களின் ஆடல் – பாடல் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன. குறித்த மாணவர்கள் கலை மன்றத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த நிகழ்வாக பட்டிமன்றம் காணப்பட்டது. “இன்றைய மாணவர்களின் உயர் கல்வித் தெரிவில் சிறந்து விளங்குவது கலைத்துறையே / தொழிநுட்பத்துறையே ?” என்ற தலைப்பில் இடம்பெற்ற குறித்த பட்டிமன்றத்திற்கு நடுவராக கவிஞர்- திரு.வே.முல்லைத்தீபன் செயற்பட்டிருந்தார்.
நிகழ்வுகளில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டிருந்த ஓய்வு நிலை அதிபர் திரு மதுரநாயகம் அவர்கள் லிட்டில் டெக் மாணவர்களுக்கான அறிவுரைகளையும் – தொழில் கல்வி தொடர்பான முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களுடன் சிறியதான கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தார்.
குறித்த நிகழ்வுக்கு லிட்டில் டெக் அக்கடமியின் ஆலோசனை குழுவை பிரதிநிதித்துவம் செய்து கிளிநொச்சி மாவட்ட கலை – இலக்கிய – சமூக செயற்பாட்டாளர்களான சி.கருணாகரன், விஜயசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.