லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா, லிற்றில் பேர்ட் புத்தக வெளியீடு மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி – 2025
ஓகஸ்ட் 16 இல் கிளிநொச்சியில் லிற்றில் ரெக் அக்கடமி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்தொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “ரியூசன் கடைகள் ஏராளம். ஆனால் கல்வியில் வட மாகாணம் பின்நிலையில் !” நிற்பதாகக் குற்றம்சாட்டினார். தனியார் கல்விநிலையங்கள் கல்வியை வியாபாரமாக்குவதாகக் குற்றம்சாட்டிய அவர், “உண்மையிலேயே இங்கு இருப்பது இலவசக் கல்வியா ?” என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த 16 ஆண்டுகளாக கிளிநொச்சியில் கணனி மற்றும் தொழில் வாய்ப்புக் கல்வியை வழங்கிவரும் லிற்றில் ரெக் அக்கடமியின் விருது வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்து இருந்தார்.
இந்நிகழ்வுக்கு மாவட்ட உதவிச் செயலாளர் ஹரிரமணன் சத்தியஜீவிதா முதன்மை விருந்தனராகக் கலந்துகொண்டார். ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் பணிப்பாளர் பு. தர்மநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் 200 வரையான மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டது. 2009இல் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் (தற்போது லிற்றில் ரெக் அக்கடமி) கடந்த 16 ஆண்டுகளாக Computer Application, ICT NVQ, Hardware, Video Editing, Graphic Designing, Web Designing, Stitching, Aari Work, Makeup, Cake Decoration ஆகிய பயிற்சிகளோடு ஆளுமைவிருத்தி, பெண்ணியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் இங்கு நடைபெறுகின்றன.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “கல்வியை வியாபாரமாக்குவதைத் தடுக்கத் தான் அரசாங்கம் கல்விச் சீர்திருத்தத்தை கொண்டுவருகின்றது. எல்லோருக்குமான கல்வியை வழங்க முற்படுகின்றது. வெறும் சான்றிதழ்களுக்கான கல்வியாக இல்லாமல் மாணவர்களுக்கும் நாட்டுக்கும் தேவையான கல்வியை வழங்க நாங்கள் முற்படுகின்றோம்” என்பதை அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். எங்கள் காலத்தில் காதல் கடிதம் கொடுப்பதற்கே காத்திருந்த காலங்கள் போய் எஸ்
எம் எஸ்ஸில் கேட்டு எல்லாம் முடிந்துபோய்விட்டது. சுயமாக காதல் கவிதை வடிக்கத் தெரியாமல் எமது இளைஞர்கள் உள்ளனர். ஒருகாலத்தில் ஈழத்துப் பாடல்கள் என்றொரு நிகழ்ச்சி இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்தது. அந்த நிலைமையை நாங்கள் உருவாக்குவோம் என்றும் ஐந்நூறுபேர்வரை கலந்துகொண்ட லிற்றில் ரெக் அக்கடமி நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார்.
பதினாறு வருடங்களாக இயங்கும் லிற்றில் எய்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிதமானது என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்ட வண பிதா யோசுவா, லிற்றில் எய்ட் ஆக இருந்து லிற்றில் ரெக் அக்கடமியாக அது ஒரு புதிய பாய்ச்சலைக் கொண்டுள்ளது எனவும் இதுவொரு நிறுவனமல்ல ஒரு இயக்கம். அதனால் தான் அவர்களால் மாற்றங்களை உள்வாங்கி பாய்ச்சலை மேற்கொள்ள முடிகின்றது எனக் குறிப்பிட்டார். அரச அதிகாரிகளும் கதிரையோடு ஒட்டிக்கொண்டிராமல் இயங்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
உதவி மாவட்டச் செயலாளர் ஹரிரமணன் சத்தியஜீவிதா லிற்றில் ரெக் அக்கடமியின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாகவும் வழங்கப்படும் சான்றிதழ்களை பதிவு செய்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி அதற்கான உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கிளி விவேகானந்த வித்தியாலயத்தின் இனியம் வரவேற்பு நடனத்துடன் திட்டமிட்டபடி நிகழ்வுகள் 9:30 மணிக்கு ஆரம்பமாகியது.
லிற்றில் ரெக் அக்கடமியின் ஸ்தாபகர் த .ஜெயபாலன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமை உரையில் “எங்கள் எல்லோருக்கும் எங்களைவிட அறிவாற்றல் மிக்க உதவியாளர் இருக்கின்றார். அவர் தான் எங்கள் கைத்தொலைபேசிகளிலும் கணணிகளிலும் உள்ள ஏஐ – செயற்கை நுண்ணறிவு. அதனைச் சரியாகப் பயன்படுத்தினால் அது மாணவர்களுக்கான விசேட பேர்ஸனல் ரியூட்டராக இருப்பார். மாணவர்களுக்கு தனியார் கல்வி தேவைப்படாது. பெற்றோர் பல்லாயிரம் லட்சம் ரூபாய்களை தனியார் கல்விக்கு செலவிடத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். லிற்றில் ரெக் அக்கடமியின் ஸ்தாபகர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களும் குடும்பங்களும் நாடும் எப்படித் தங்கள் வளங்களைப் பயன்படுத்துவது என்பது முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், இந்த வளப்பங்கீட்டில் சரியான தெரிவை மேற்கொண்டால் மாணவர்களும் குடும்பங்களும் நாடும் நல்ல நிலையை அடையும். தமிழர்கள் தங்களுடைய வளத்தை கடந்த காலத்தில் யுத்தக்கருவிகளில் செலவிடாமல் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிட்டிருந்தால் தமிழர்கள் மேன்நிலை அடைந்திருக்க முடியும் எனவும் த .ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.
லிற்றில் ரெக் அக்கடமியுடன் நீண்டகாலமாகப் பயணித்து வருகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் மு. சந்திரகுமார் தொழில்நுட்பக் கல்வியின் அவசியத்தை அங்கு வலியுறுத்தி கிளிநொச்சியில் இயங்குகின்ற இரு முக்கிய நிறுவனங்கள் லிற்றில் ரெக் அக்கடமி, ஜேர்மன் ரெக் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜேர்மன் ரெக் பணிப்பாளர் பு. தர்மநாதன் சுட்டிக்காட்டியதை மேற்கோள்காட்டிய மு. சந்திரகுமார், ஜேர்மன் ரெக்கில் கற்பவர்களில் 20 வீதத்துக்கு குறைவானவர்களே வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றிருந்த நிலை மாறி வடக்கைச் சேர்ந்த 60 வீதமானவர்கள் தற்போது அங்கு பயிற்சிகள் பெறுவதும், தமிழிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதும் பாராட்டப்பட வேண்டியதொன்று எனத் தெரிவித்தார். லிற்றில் ரெக் அக்கடமியும் ஜேர்மன் ரெக்கும் பக்கம் பக்கமாக ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதாக ஜேர்மன் ரெக் பணிப்பாளர் பு. தர்மநாதன் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
வடமாகாணத்தின் கல்வி கடந்த பத்தாண்டுகளாக வீழ்ச்சி நிலையைக் கண்டிருப்பதற்கு கல்வியலாளர்களே முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டிய சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார், நூற்றுக் கணக்கான , ஆயிரக் கணக்கான கல்வியியலாளர்கள் வலயக் கல்விப் பணிமனைகளில் இருந்த போதும் தொடர்ச்சியாக வடக்கின் கல்வி மட்டம் கீழ்நிலையிலிருப்பது எங்கோ தவறு இருக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது எனத் தெரிவித்தார். வலயக் கல்வி அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தால் வளப்பங்கீடுகளை நேர்த்தியாக மேற்கொண்டால் வடக்கின் கல்வி முன்னேறிச் செல்லும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லிற்றில் ரெக் அக்கடமியின் விருது வழங்கும் நிகழ்வில் 12 தொழில்முனைவோர் பற்றிய தகவல்களைத் தாங்கிய லிற்றில் பேர்ட் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதன் வெளியீட்டுரையை அ. மேனுஷாவும் நூல் நயவுரையை பிரியந்தன் டிலக்சனாவும் வழங்கினர். யதுகுலா றஜீதன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது உரையை மேற்கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றியவர்கள் அமைச்சர் சந்திரசேகர் உட்பட லிற்றில் ரெக் அக்கடமியின் கடந்த கால சாதனைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தினர். இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கல்வியியலாளர்கள் கலந்து சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
#LTA #certificateceremony #Exhibition #Littlebirdbooklaunch #littletechacademy#northerncreativehubs






































































































































































































