இலங்கையின் மூத்த குடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழர்களான எங்களிடம் முறையான வரலாற்றுப்பேண்முறை என்பது எப்போதும் இருந்தது கிடையாது. பழையதைப்பேசி என்னவாகப்போகிறது என்ற பேச்சுடன் மறக்கடிக்கப்பட்ட நாம் மறந்து போன நமது கடந்த காலத்தின் வரலாறுகளும் , வரலாற்று ஆளுமைகளும் ஏராளம். கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் ரெக் அக்கடமியின் யார் எவர் எனும் ஆளுமைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் மூன்றாவது பாகம் தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக இவ் வருடம் வெளியானது. எனவே கிளிநொச்சியின் 250க்கும் மேற்பட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய லிற்றில் ரெக் அக்கடமி இந்த ஆண்டு முல்லை நிலத்தின் ஆளுமைகளை ஆவணப்படுத்தியிருக்கிறது. மறைந்து கொண்டு இருக்கும் தமிழரின் பழங்கலைகளுக்கு புத்துயிர்ப்பு கொடுத்தவர்கள், நிலத்தின் வலிகளை கலையாக்கியவர்கள், மாவட்ட முன்னேற்றத்தில் முன்னின்று உழைத்தவர்கள் இயங்குநிலையில் உள்ளவர்கள், புதிய தலைமுறை கலைஞர்கள் என நூற்றுக்கும் அதிகமான முல்லை நிலத்தின் ஆளுமைகளை இந்த ஆண்டும் யார் எவர் பாகம் மூன்றில் ஆவணப்படுத்தியிருக்கிறார் செல்வி நாகேஸ்வரன் லக்சனா.

நீண்ட தேடலுடனும் – ஓராண்டுக்கும் மேலான கடும் பிரயத்தன முயற்சிகளின் வழியாகவும் வெளியான இந்த நூல் 23.11.2025 அன்று லிற்றில் ரெக் அக்கடமியின் முன்னாள் இயக்குனர் அமரர் சிவஜோதி அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த விருது நிகழ்வில் கிளிநொச்சி, திருநகர் கல்வி பண்பாட்டு மண்டபத்திலுள்ள லிற்றில் ரெக் அக்கடமியில்; காலை 9.45 மணிக்கு , அகவணக்கத்தை தொடர்ந்து லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களின் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் அவ் அக்கடமி மாணவி தி.திபீகாவின் வரவேற்புரையுடனும் இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு கிளிநொச்சியைச் சேர்ந்த முத்துக்குமார குருக்கள் ; சிவ ஸ்ரீ மகேஸ்வர நாத குருக்கள் ஆகியோர் ஆசியுரையினை வழங்கினார்கள்.

தொடர்ந்தும் சட்டத்தரணி திரு.சோ.தேவராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; அமரர் வ.சிவஜோதி தொடர்பான நினைவு பேரூரையை சி.கருணாகரன் நிகழ்த்தினார். தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் திரு.ந.ரவீந்திரன் அவர்களின் சிறப்புரையையும் தொடர்ந்து , சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.முருகேசு சந்திரகுமாரின் உரை என்பன இடம்பெற்றன.

ஆய்வாளரும் ஊடகவியலாளருமான திரு.ஜெயம் ஜெகனின் நூல் வெளியீட்டுரையினைத் தொடர்ந்து நூலின் முதலாவது பிரதியை கிளி/ விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் அவர்கள் வெளியிட செல்வி வெண்பா சிவஜோதி அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன, தொடர்ந்து எழுத்தாளரும் விமர்சகருமான திரு.சி.ரமேஷ் அவர்களின் சமூக வரலாற்று புலத்தில் ஆவணப்படுத்தலும் அதன் பெறுமானமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் 2025ஆம் ஆண்டிற்கான வ.சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வாழ்நாள் இலக்கிய பணிக்காக சிவசுந்தரலிங்கம் தமயந்தி (தமிழ்கவி) அவர்களுக்கு வழங்கியதோடு ஒருலட்சம் காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்கே என்கே குடை என்கே என்ற இளையோர் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந் நிகழ்வின் இறுதியாக லிற்றல் ரெக் அக்கடமியின் ஆசிரியர் செல்வி நா.லக்சனாவின் ஏற்புரையும், அவ் அக்கடமியின் பணிப்பாளர் திருமதி ஹம்சகௌரி சிவஜோதியின் நன்றியுரையும் இடம்பெற்றது.

Leave a Reply

X