யாழ் பொதுசனநூலகத்தின் ஓய்வு பெற்ற பிரதம நூலகர் ச தனபாலசிங்கம் அவர்களினதும் சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் ஜெயலட்சுமி சுதர்சன் அவர்களினதும் நூலக சேவையை கௌரவிக்கும் நிகழ்வு லிற்றில் நூலகத் திறப்பு நிகழ்வு இற்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று மார்ச் 13ம் திகதி கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் என 200 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

லிற்றில் நூலகம் திருநகரைச் சுற்றியுள்ள பத்துவரையான கிராம மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுவதாக லிற்றில் எய்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களோடு பொதுநூலகமாக ஆரம்பிக்கப்படுகின்ற இந்நூலகம் காலக் கிராமத்தில் வர்த்தகம், கணணி மற்றும் தையல் கலைக்கான நூலகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நீண்டகாலத் திட்டம் எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.

தமிழ் பிரதேசங்களின் கல்வி வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பது வாசிப்பை எம்மவர்கள் கைவிட்டது எனத் தெரிவித்த லிற்றில் எய்ட் இன் இயக்குநர் – இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி வாசிப்பு பழக்கத்தை தூண்டுவதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்ட முடியும் என்றும் அதனால் சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தில் தாங்கள் கூடுதல் கவனம் எடுக்க உள்ளதாகவும் அதற்காகா மாதாந்த வாசிப்பு வட்டம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லிற்றில் நூலகத்திற்கான பயிற்சி நூலகராக கே இவாஞ்சலி பொறுப்பேற்றுள்ளார்.

லிற்றில் நூலகத்திற்கான திட்டம் நீண்டகாலமாக இருந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுத்தது அமரர் இராசமணி பாக்கியநாதனின் பிள்ளைகளே. உலகின் வெவ்வேறு பாகங்களில் அவர்கள் வாழ்ந்த போதும் தாயக மக்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொண்டு இந்நூலகத் திட்டத்திற்காக எட்டு இலட்சம் ரூபாய்கள் வரை வழங்கி உள்ளனர். நூலக அறையை வடிவமைப்பதுஇ அதற்கான தளபாடங்களை பெற்றுக்கொள்வதுஇ நூல்களைப் பெற்றுக்கொள்வது என்பனவற்றோடு பத்திரிகை வாசிப்புக்கான குடில் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. பத்திரிகை வாசிக்க வருபவர்கள் நூலகத்திச் செயற்பாடுகளை பாதிக்காமல் இருப்பதற்காகவும் இடவசதிக்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லிற்றில் நூலகத்தை அமரர் இராசமணி பாக்கியநாதனின் முத்த புதல்வர் ஸ்ரீகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தார். தற்போது மலேசியாவில் வாழ்கின்ற தொழிலதிபரான இவரோடு இவரது சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். லண்டனில் இருந்து லிற்றில் எய்ட் இன் தலைவர் கதிரமலை நந்தகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். லிற்றில் எய்ட் தலைவர் க நந்தகுமார் லிற்றில் எய்ட் இன் செயற்திட்டங்களை பார்வையிடுவதுடன் லிற்றில் எய்ட்இன் மேற்பார்வையில் இயங்கும் முல்லைத்தீவில் உள்ள கற்சிலைமடுவின் குழந்தைகள் அமைப்பின் செயற்திட்டங்களையும் பார்வையிடுவார்.

இந்நூலகத் திறப்பு விழா நிகழ்வு ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சி இதயராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ கேதீஸ்வரன் கலந்துகொண்டார். எழுத்தாளர் கருணாகரன் “ஏன் புத்தகங்கள்? எதற்காக வாசிப்பு?” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் மாணவர்களின் தயாரிப்பில் ஒரு குறும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
2009 மார்ச் 19இல் லண்டனில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு அதற்கு முன்பிருந்தே தனது உதவிப் பணிகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மோலாக மேற்கொண்டு வருகின்றது.

லிற்றில் எய்ட் இன் இந்த லிற்றில் நூலகத் திட்டத்தை மிகவும் வரவேற்ற நூலகவியலாளர் என் செல்வராஜா இந்நூலகம் கிளிநொச்சி – வன்னி மண்ணின் ஒரு சிறப்பு நூலகமாக வளரவேண்டும் என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் நூலகப் பயிற்சிகளையும் ஆலோசணைகளையும் தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கும் உதவி வருகின்றார்.

ஸ்கொட்லாதில் உள்ள ‘புக் அப்ரோட்’ அமைப்போடு இணைந்து பல லட்ச்சக்கணக்கான குறிப்பாக சிறார்களுக்கான ஆங்கில நூல்களை குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவர முயற்சி எடுத்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. அப்பணியில் அவரோடு லிற்றில் எய்ட் இணைந்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது சுகவீனமாக உள்ள அவர் பூரண சுகமடைந்து தனது நூலக சேவையைத் தொடர இயற்கை அன்னையை வேண்டுகின்றோம் என லிற்றில் எய்ட் சார்பில் அதன் இணைப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவித்தார்.

Leave a Reply

X