லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களிடையே தொழில் கல்வி சார்ந்த திறன் விருத்தியை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் தொழில் சார்ந்த கல்வியுடன் இணைந்ததாக ஆங்கில கல்வி அறிவையும் மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இந்த வருடம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் ஆங்கில வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஆங்கில புத்தகங்களை அன்பளிப்பு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச ஆங்கில வகுப்புக்கள் 01.11.2023 முதல் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி பணிமனையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆங்கில வகுப்பின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளிகளுக்கு பொறுப்பான கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை உதவிப் பணிப்பாளர் திரு.புண்ணியராஜ் அவர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி பின் குறித்த ஆங்கில வகுப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பில் சிற்றுரையாற்றினார். இதன் போது வெளிநாட்டில் இருந்து நமது உறவுகள் தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை இங்குள்ள நம் உறவுகளுக்காகவும் ஒதுக்கி இந்த வகுப்புக்களை சேவை அடிப்படையில் வழங்குவது நம் மீது புலம்பெயர்ந்தவர்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடு என தெரிவித்தததுடன் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இந்த பணி தொடர வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

குறித்த வகுப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி ” கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு அடிப்படையிலேயே ஆங்கில கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற திறன் விருத்தி மையத்தின் சமூக நோக்கின் ஓர் அங்கமே இந்த வகுப்புகள். மாணவர்களிடையே ஆங்கிலக்கல்வி தொடர்பான மனநிலை மாற்றத்தை – ஆர்வத்தை ஏற்படுத்த முன்னர் முன்பள்ளி ஆசிரியர்களிடையே இந்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தூரநோக்கே இன்றைய நாளுக்கான காரணம். இந்த வகுப்புக்களில் தொடர்ச்சியான பங்குபற்றுதல்களுடன் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் போதே எங்களால் ஆர்வமாக கற்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆங்கில பாட வளவாளர்கள் தொடர்பான அறிமுகமும் அதன் பின்பு முதல்நாள் வகுப்புக்களும் இனிதே ஆரம்பமாகின.

Leave a Reply

X