லிட்டில் டெக் அக்கடமியில் தொழிற்திறன் கற்கையை பூர்த்தி செய்த 2023/A, 2023/B, 2024/A ஆகிய பிரிவு மாணவர்களுக்கான திறன் அடைவு மட்டத்தை உறுதி செய்யும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு 10.08.2024 அன்று லிட்டில் டெக் அக்கடமி அமைந்துள்ள வளாகத்தின் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

லிட்டில் டெக் அக்கடமியின் நிறுவுனர் தம்பிராஜா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகள் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலய மாணவர்களின் இன்னியம் குழுவினரின் வரவேற்புடன் ஆரம்பித்தது. நிகழ்வுகளின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் நம்பிக்கை நிதிய உறுப்பினர் திருமதி . அருள்சோதி மோகனசுந்தரம், கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குநர் அருட்தந்தை மி . செபமாலை பெரேரா ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை தம்பிராஜா ஜெயபாலன் தொழில்நுட்ப போட்டிகளுடன் கூடிய வகையில் மாறிவரும் தொழில்சந்தையின் கேள்விகளை மையப்படுத்தி மாணவர்கள் தங்கள் தொழில் கல்வியை எவ்வாறு தெரிவு செய்வது என்பது தொடர்பான விடயங்களை வலியுறுத்தினார். பாடசாலை காலம் முதல் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் புத்தகங்களை மட்டுமே மையப்படுத்தி காணப்படுவதால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்றும் கலைப்பாடங்களையே தெரிவு செய்கின்றனர். மேலும் பல்கலைக்கழகங்களில் கலைப்பாடங்களை தெரிவு செய்வோர் தொகை அதிகமாக காணப்படுவதானது ஆரோக்கியமற்றது. தமிழர்கள் பகுதிகளில் கணித ஆங்கில பாடங்களை பொருத்தவரையில் அதிக கேள்வி ஆசிரியர்களுக்கு நிலவும் போதிலும் கலைப்பாட பட்டதாரிகளே அதிகமாக உள்ளனர். இதே நிலை தான் தொழில் கல்வி தொடர்பிலும் நீடிக்கின்றது. மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை லாவகமாக கையாள கூடியவர்களாக உருவாவதுடன் தொழில்சந்தையின் கேள்விகளை கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என வலியுறுத்தி தனது தலைமையுரையை தேசம் ஜெயபாலன் வழங்கினார்.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மூத்த கல்வியியலாளரரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளருமான கலாநிதி சிவகுமார் மாணவர்களுக்கான அறிவுரைகளையும் கிளிநொச்சி மாவட்ட அறிவியல் நகரை மையப்படுத்தி இயங்கும் பொறியியல் பீடத்தை தமிழ் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தாத நிலை உள்ளது தொடர்பிலும் விசனம் வெளியிட்டார். மேலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெறுவது கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர்களை தொழில் உலகிற்கு வழிப்படுத்தும் மிகப்பெரிய செயற்றிட்டம் என தனது வாழ்த்துக்களை கலாநிதி சிவகுமார் தெரிவித்திருந்தார்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் – சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான சந்திரகுமார், கிளிநொச்சியில் இயங்கி வரும் ஜேர்மன் கல்வி நிலைய அதிபர் தர்மநாதன் , வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் தரன் சிறீ ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளிகளின் உதவிப் பணிப்பாளர் யுவராசா சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடைய உரையில் கிளிநொச்சி மாவட்ட தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக வழங்கப்பட்ட லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இலவச ஆங்கில கற்கை நெறி தொடர்பில் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார். மேலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆங்கில வகுப்புக்களும் – செயற்பாடுகளும் தனித்து திருநகர் பகுதிக்குள் மட்டுமே முடங்கி விடாமல் பூநகரி , பளை , கண்டாவளை என கிளிநொச்சியின் ஏனைய முன்பள்ளி ஆசிரியர்களையும் நோக்கி படர வேண்டும் என்ற கோரிக்கையை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்தார்.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மத்யூஸ் மதுசூதன் இன்றைய இளைய தலைமுறையின் வாழ்வும் – எதிர்கால வாய்ப்புக்களும் என்ற தொனிப்பொருளிலான தன் உரையை வழங்கியிருந்தார்.

குறித்த நிகழ்வில் லிட்டில் டெக் அக்கடமியின் ஜேர்மனி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான திருமதி கங்கா ஜெயபாலன், சிவபாத கலையகம் பாடசாலை அதிபர், லிட்டில் டெக் அக்கடமியின் ஜேர்மன் செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் உதயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கான பதக்கங்களையும் – சான்றிதழ்களையும் வழங்கியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான அடிப்படை கணினி வகுப்புக்களுக்கான சான்றிதழ்கள், கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா ஆங்கில கற்கைகளுக்கான சான்றிதழ்கள் , தையல் , கணினி கொள்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் ஆங்கில டிப்ளோமா கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் லிட்டில் டெக் அக்கடமியின் ஜேர்மன் செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் உதயன் அவர்களினால் அன்பளிப்பு தொகை வழங்கப்பட்டதுடன் குறித்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்குமான பயன் தரு மரங்களை வழங்கும் செயற்பாடு பசுமைக்குரல் மற்றும் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகிய அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்ந்ததுடன் ஆண்டு 2024க்கான சிறந்த ஆசிரியராக செல்வன் ஞா.பொபிதரன் தெரிவு செய்யப்பட்டு நிறுவன ஸ்தாபகர் தம்பிராஜா ஜெயபாலனால் கௌரவிக்கப்பட்டார். திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்றுவரும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இறுதியாக ஆசிரியர் பவதாரணி ராமசாமியின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

நிகழ்வுகளில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் லண்டன் நம்பிக்கை நிதிய உறுப்பினரும் பல் வைத்திய நிபுணருமான திருP.சிவக்குமார் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X