லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் 23.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகளுக்கு திருமதி பிரியன் டிலக்சனா தலைமை தாங்க கிளிநொச்சி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்க்கவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.  மேலும் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட HNB வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு பாலேஷ் கந்தன்  மற்றும் தருமபுரம் மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி சத்தியகலா கமலகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்புடனும் மங்கள விளக்கேற்றலுடனும் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நம்பிக்கை நிதிய உறுப்பினர் திருமதி அருள்சோதி மோகனசுந்தரம் ஆசியுரை வழங்கி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

தலைமையுரையை வழங்கிய திருமதி பிரியன் டிலக்சனா பெண்களில் முதலீடு செய்தல் என்பது தொடர்பான நிகழ்வின் கருப்பொருளை மையப்படுத்தியதான உரையை வழங்கியிருந்தார். “பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்களின் தன்னம்பிக்கையில் உள்ளது எனவும் அவர்களில் முதலீடு செய்தல் என்பது தான் மகளிர் சுயமாக தலைநிமிர்ந்து நிற்க வழிவகுக்கும் எனவும் இன்றைய சமகாலத்திற்கு தேவையான பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த மகளிர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரான தமிழ்க்கவி கருத்துரை வழங்கியிருந்தார். அதில் பேசிய அவர் “தன்னுடைய பெண்பிள்ளைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என ஓடி ஓடி உழைக்கும் தந்தை தன் மனைவிக்கு எதுவும் செய்ய சிந்திப்பதில்லை. அவளின் முன்னேற்றத்தை பற்றி வாய் திறப்பதில்லை என்ற கோணத்திலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பெண்கள் செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலும் தன்னுடைய உரையை நிகழ்த்தியிருந்தார்.

தொடர்ந்து கருத்துரை வழங்கிய கிளிநொச்சி மாவட்ட HNB வங்கி முகாமையாளர் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் காத்திரமான பணிகளுக்கு சமூக நோக்கில் செயற்படும் வங்கி என்ற அடிப்படையில் HNB வங்கி இனிவரும் காலங்களிலும் துணை நிற்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இது தவிர லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் பலருடைய கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தது. அத்துடன் பிரசாந்தினி நர்த்தனநாட்டியாலயம் வழங்கியிருந்த மாதர் சமர்ப்பணம் என்ற நடனம் பார்வையாளர்களின்  கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் ஆசிரியை திருமதி சத்தியகலா கமலகாந்தன் நடுவராக பங்கேற்க லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த “பெண்களின் வளர்ச்சியில் தடையாக காணப்படுவது குடும்பங்களா..? சமூகமா என்ற தொனிப்பொருளிலான பட்டிமன்றமும், லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆசிரியை கஜானி அவர்களின் வழிகாட்டுதலில் அரங்கேற்றப்பட்ட   “பெண் சுதந்திரம்” என்ற நாடகமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

நிகழ்வுகளின் இறுதியாக கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றும் வகையில் தேசிய கபடி விளையாட்டு அணியில் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனைகளான பாஸ்கரநாதன் டனுஷா,  இதயரஞ்சன் தேனுஜா ஆகியோர் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான ஊக்கத்தொகையான நிதி அன்பளிப்பு ரூபா இருபதாயிரத்தை கிளிநொச்சி மாவட்ட HNB வங்கியினர் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஊடாக வழங்கி கௌரவித்திருந்தனர்.  கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய உருள்பந்து  வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X